search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பணியாளர்கள் பணி நீக்கம்"

    விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். #ChennaiMetroRail
    பூந்தமல்லி:

    விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதால் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் பணியாளர்கள் கோயம்பேடு அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    சென்னை கோயம்பேடு மெட்ரோ ரெயில் நிறுவன தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகத்தில் இருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பணியாற்றி வந்த 8 பணியாளர்கள், விதிகளுக்கு புறம்பாக செயல்பட்டதாக கூறி பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த செய்தி காட்டுத்தீ போல் பரவியதால் கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் பணியாற்றும் சக ஊழியர்கள் இதனை கண்டித்து நேற்று மதியம் முதல் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலகத்தில் பணியை புறக்கணித்து தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் கலைந்து செல்ல மறுத்தனர்.

    இவர்களுக்கு ஆதரவாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரும் கைக்குழந்தைகளுடன் மெட்ரோ ரெயில் நிர்வாக அலுவலக நுழைவு வாயிலில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கூறியும் அவர்கள் கலைந்து செல்ல மறுத்து விட்டனர்.

    பணி நேரம் முடிவடைந்ததும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போலீசார் வெளியேற்றினர். பின்னர் அவர்கள், கையில் பதாகைகளுடன் நுழைவு வாயிலில் நின்று மெட்ரோ நிர்வாகத்தை கண்டித்து கோஷமிட்டனர். இவர்களுடன் அவர்களது குடும்பத்தினரும் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதற்கிடையில் மெட்ரோ ரெயில் நிர்வாக அதிகாரிகளால் 2 ஊழியர்கள் தாக்கப்பட்டதாக தகவல் பரவியதால் சக ஊழியர்கள் உள்ளே செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, “முதலில் 8 மணி நேரமாக இருந்த பணியை தற்போது 14 மணி நேரமாக மாற்றி விட்டனர். விடுமுறையும் கொடுப்பதில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வருகிறோம். தற்போது சங்கம் அமைத்ததால் 8 பேரை பணி நீக்கம் செய்துள்ளனர். நிரந்தர பணியாளர்களை நிறுத்திவிட்டு ஒப்பந்த முறையில் அனைத்து ஊழியர்களையும் நியமிக்கவே இவ்வாறு செயல்பட்டு வருகின்றனர்” என்றனர்.

    இந்த செய்தி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் படிப்படியாக பரவியதால், மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமுடிவு செய்தனர். இதனால் நேற்று இரவு மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் ஒழுங்கீனம், பணிநியமன விதிகளின் படி பணியாற்றாதது, விதிகளை மீறி செயல்பட்டது, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் நலனுக்கு எதிராக செயல்பட்டது, ஒழுங்கினமான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு உடந்தையாக செயல்பட்டது போன்ற காரணங்களால் 8 பணியாளர்களிடம் இருந்து கடந்த டிசம்பர் மாதம் விளக்கம் கேட்கப்பட்டது.

    இதில் 3 பேர் தொழில்நுட்ப துறையிலும், 2 பேர் நிலைய கட்டுப்பாட்டாளர்களாகவும், 2 பேர் போக்குவரத்து கட்டுப்பாட்டாளர்களாகவும், ஒருவர் இளநிலை பொறியாளர் (மின்சார துறை) ஆகவும் பணியாற்றி வருகின்றனர்.

    இவர்கள் அளித்த விளக்கம் திருப்தி இல்லாததால், மறுபடியும் 2 விசாரணை அலுவலர் நியமிக்கப்பட்டு அவரிடம் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. அந்த விளக்கமும் திருப்தி அளிக்கவில்லை என்று விசாரணை அலுவலர் கூறி உள்ளார்.

    கடந்த 26-ந்தேதி 8 பணியாளர்களையும் அவர்கள் பணியாற்றும் துறை இயக்குனர் பணிநீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்து உள்ளார். பணி நீக்கம் செய்யப்பட்ட 8 பணியாளர்களும் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன நிர்வாக இயக்குனரிடம் முறையிடவும் வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை யாரும் முறையிடவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தநிலையில் சென்னை மெட்ரோ ரெயில் ஊழியர்கள் சங்கத்தின் தலைவரும், சி.ஐ.டி.யூ. தமிழ் மாநிலக்குழு தலைவருமான அ.சவுந்தரராஜன் நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்ட மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

    மெட்ரோ ரெயில் ஊழியர்களுக்கு வழங்கவேண்டிய சம்பளம், அலவன்ஸ், மகப்பேறு விடுமுறையை குறைத்தார்கள். அரை சம்பள விடுமுறை ரத்து செய்யப்பட்டது. ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டது பற்றி தொழிலாளர் துறையில் முறையிட்டும் மெட்ரோ ரெயில் நிர்வாகம் சரியான பதில் சொல்லாததால் தொழிற்சங்கம் அமைத்தார்கள். அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பொய் புகார் கொடுத்து சங்க நிர்வாகிகள் 8 பேரை பணி நீக்கம் செய்தார்கள்.

    பணியாளர்கள் சந்திக்க முயன்றும் அதற்கு சென்னை மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் மறுத்துவிட்டதால் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளனர். தொழிலாளர் நலத்துறை நாளை (இன்று) காலை 10 மணிக்கு தொழிற்சங்க பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருக்கிறது. தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் நடைபெறும் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு, நியாயம் கிடைத்தால் போராட்டம் வாபஸ் பெறப்படும். இல்லை என்றால் தொழிலாளர்களின் போராட்டம் தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட பணியாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
    ×